மார்கழி பனியை மெல்ல மெல்ல தின்ற சூரியன் தன் பசியால் சிவந்த கண்களை வெண்மையாக்கி கொண்டிருந்தது.
எனக்கு மட்டும் ஏன் இப்படி?
கண்ணாடியில் தெரிந்த பிம்பத்திடம் எத்தனையோ முறை கேட்டும் விடை அது தந்ததில்லை. தரப்போவதுமில்லை. யாரிடமும் கேட்கவும் தோன்றியதில்லை.
கேட்டிருக்கிறேன். முன்பு ஒரு முறை. எல்லாருடைய நகைத்தலுக்கும் பாடுபொருளானேன். விடைதான் கிடைத்ததில்லை. உடைந்து போன செல்போன், நேரத்தை கண்டுபிடி என்று கண்ணாமூச்சி ஆடியது.
பசிக்கிறது. நேரம் 8ஐ நெருங்கிவிட்டது. ஆதிகாலத்தின் முதல் கடிகாரம் வயிறாகத்தான் இருக்க வேண்டும். புதியதாக வாங்கிய நோக்கியா போன் மின்னியது. காதில் மாட்டிக்கொண்ட ஹெட்போன் வெளிப்புற சத்தங்களை உறிஞ்சிக்கொண்டு இசையை துப்பியது.
செவிக்கு உணவில்லாத போது........... வள்ளுவர் பொய் சொல்லி இருப்பாரோ.
சென்னை வாகன நெரிசல்களில் உருமிக்கொண்டு ஊர்ந்து செல்லும் வாகனங்களை போல பசி ஏற்றம் இறக்கமாக நீள்கிறது.
சென்னையில் ஒன்று பெரிய உணவுவிடுதிகள் அல்லது கச்சடா உணவுவிடுதிகள். இரண்டு மட்டும்தான். நடுத்தர வர்கத்திர்ர்ர். நான்கு இட்லி - அதை இட்லி என செல்ல முடியாது கொஞ்சம் உப்பிய கையடக்க தோசை - இது பெரிய ஹோட்களில் விலை 22ரூ. குறைந்த பட்சம் 8 இட்லி தேவைபடும் என் பசியில் பாதி குறைய. 10ரூபாய்க்கே நாலும் கிடைக்கிறது கச்சடா ஹோட்டல்களில். மணி அங்கேதான் சாப்பிடுறான். எனக்கு அது ஒவ்வுவதே இல்லை.
நீ ஏன் இப்படி இருக்க... குருவின் கேள்விக்கு இன்றுவரை என்னிடமே பதில் இல்லை.
எனக்கு மட்டும் ஏன் இப்படி...
சென்னையில் வீடு கிடைப்பது குதிரை கொம்பு. அதும் நமது விரும்பும் பட்ஜெட்ல அமைனும்னா சும்மாவா. சென்னை வந்ததும் நண்பனின் நண்பனோட நண்பனின் அறையிலேதான் வாசம். ஒரு வாரம் தங்கிக்கனு தாராள மனதுடன் சொல்லிவிட்டார் ந.ந.ந. ஆனா ஒரு வாரத்திலே எப்படி பிடிக்க வீட்டை.
அடுத்த நாளே ஒரு வீட்டை பார்த்தாச்சி. 2200 வாடகை. 15000 அட்வான்ஸ். வாங்கிற 4500 சம்பளத்துக்கு எப்படி சாத்தியப்படும். அதுக்கு அடுத்த நாளும் டிட்டோ. குருதான் ஒரு யோசனை சொன்னான். உன் நண்பர்கள் யாராச்சும் சென்னையிலே இருந்தா ஷேர் பண்ணிக்கோ என்று. குரு ந.ந.நவின் நண்பர். இந்த மூன்று நாட்களில் எனக்கும் நல்ல நண்பராகிருந்தார்.
குரு, இப்போ சென்னையில இருக்க ஒரே நண்பன் நீ மட்டும்தான். பத்மாசுரனுக்கு வரம் தந்த சிவனாக குரு. இங்கே ஏற்கனவே 5 பேர் இருக்கோமே. நான் எதும் சொல்லவில்லை. சொல்லவும் முடியாது. நான்காவது ந. சாப்பிடலாமா - இதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
8தானே இப்போ, ஒரு 9.30 சாப்பிடலாம். கொஞ்ச நேரம் கேரம் விளையாடிட்டு வரோம். சமையல்காம்மா செஞ்சி வச்ச சப்பாத்தி குர்மா வாசனை படந்தது, 7.30 என் அலாரம் அடித்தாகிவிட்டது.
அவர்களை விட்டு சாப்பிடவும், பசிக்கிறதென்று சொல்லவும் சங்கோஜமாகவே இருந்தது. வீட்டுக்கு பேசனும்னு பொய் சொல்லி வெளியேறி விட்டேன். கையிலே 200க்கும் குறைவுதான், அதில்தான் இந்த வாரத்தையே ஓட்டியாகனும். பசிக்கு இந்த சிந்தனையே கொஞ்சமும் இல்லை.
2 பரோட்டா.....
சாப்பிடவா, பார்சலா
சொன்னேன். சுட சுட வந்தது. சாப்பிட்டேன். ம்ம் 9.30 வரை கண்டிபாக தாக்கு பிடிக்கலாம்.
இன்னும் செல்போன் வாங்கலையா, குருதான், அவனை தவிர யாருக்கும் என்னிடம் பேசினதில்லை. எதிரில் வரும் போது புன்சிரிப்பு, அதிகபட்சம் பாஸ் அந்த கதவை சாத்திடுங்களேன்,
இல்லை குரு, அதான் வீட்டுக்கு பேச.... சின்ன வயசிலே இருந்தே சின்ன சின்ன பொய்க்கும் நடுங்கும் கால்கள்.
என்னோட நம்பரை கொடுத்துருங்க, எதாச்சும் அவசரம்னா கூப்பிட உதவியா இருக்குமில்லே.
ரொம்ப தேங்ஸ் குரு... நான் நினைந்திருந்த சென்னை மெல்ல மெல்ல மூழ்கி கொண்டிருந்தது.
எல்லாரும் ஆட்டத்தில் மும்முரமானார்கள், பாதி பசி என்னோடு தனியாவர்த்தனம் புரிந்து கொண்டிருந்தது. பசி மயக்கம். அரை தூக்கத்தில் அண்ணே உங்க ஐடி கார்டு என்ற சத்தம் கேட்டுதான் விழித்தேன். ஹோட்டலிலேயே விட்டுட்டு போயிட்டிங்க. சாப்பிட்ட இடத்தில் தவறவிட்டிருக்கிறேன். அவர்கள் என்னையும் அந்த பையனையும் மாறி மாறி பார்த்தார்கள். பையன் வந்த வேலை முடிந்தது என ஓடிப்போனான். அவர்கள் எதும் கேட்கவில்லை. கேட்டால் என்ன பதில் சொல்லுவது. அவமானமாக இருந்தது.
குரு மெல்ல ஆரம்பித்தான் நீ வேணும்னா சாப்பிட்டு படுத்துக்க. இல்லே எல்லாரும் ஒன்னாவே சாப்பிடலாம். பசியில் குரல் கம்மி போனது.
எல்லாரும் ஆட்டத்தை நிறுத்திவிட்டு சாப்பிடவந்தார்கள். எனக்காகவே என்பது புரிந்தது, சந்தோசத்தையும் கொஞ்சம் கூச்சத்தையும் தந்தது. குருவோடு சேர்ந்து செந்தில், சுரேஷ், மாரிமுத்து, பாலாஜி எல்லாரும் நண்பர்களாகி போனார்கள் அன்றே. பாஸ்.
குருதான் தனியாக வந்து கேட்டான் ஏன் இப்படி இருக்க? பசிச்சா இங்கயே சாப்பிட வேண்டியதுதானே.
அநாவசியமா ஏன் ஹோட்டல் போற இங்கயே இருக்கும் போது. எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை. ஒரு மணி நேரம் கூட பசியை தாங்க முடியாமல் ஏன் எனக்கு மட்டும் இப்படி.
பழைய நிகழ்ச்சி அசைப்போட்ட படியே வந்து சேர்ந்தாயிற்று ஹோட்டலுக்கு.
என்ன வேணும் என்று சர்வர் கேட்கவே இல்லை, கடந்த 7-8 மாதமாகவே காலையிலே 4 இட்லி ஒரு வடைதான். சரியாக 25ரூ. குரு மற்றும் அவரது நண்பர்கள் எல்லாம் திசைக்கொரு பக்கம் பிரிந்து போன பின் என் முக்கிய பிரச்சனையே சாப்பிட்டில்தான். காலை 25ரூ, மாலை 40ரூ, இரவு 35ரூ, சரியாக ஒரு நாளைக்கு சாப்பாட்டுக்கு 100ரூபாய். இந்த வரிசையை மாற்ற விரும்ப வில்லை. இத்தனை வருட சென்னை அனுபவத்தில் பசியை அடக்க முடியவில்லை, கொஞ்சமாக குறைத்து இருக்கிறேன். தினமும் ஒரே வகை சாப்பாடு. அலுத்துபோனாலும் மாற்ற முடியவில்லை. மதியம் ஆனந்தாவில் முழுசாப்பாடு. இரவு சேட்டு கடையிலே ஏழு சப்பாத்தி. வாங்கும் 6500 சாப்பாட்டில் 3000ரூ சாப்பாட்டிற்கே போய்விடுகிறது.
அறையிலயே சமைக்கலாமில்லே, குரு ஒரு பழைய அறையின் தட்டு, முட்டு பாத்திரங்களை தர தயாராகத்தான் இருந்தான். இடம்தான் இல்லை. 10x10 அறை. இந்த அறைக்கு 1200ரூபாயாம். பஸ் பாஸ் வாங்க ரூ 600 போக. மாசம் 1700 மீந்தும். அதும் வீட்டுக்கு அனுப்பிவிட மிஞ்சுவது 50ஓ 100ஓ.
100ரூ மிச்சமாகும் நாட்களில் மாதம் ஒரு படம். அதுவும் இரண்டாம்தர தியேட்டர்களில் மட்டும், அங்குதான் முதல் வகுப்பு 30ரூ. மிச்சம் 20 முதல் 70வரை. அதில் தான் குளியல் சோப், துவைக்கும் சோப் இன்ன பிற சில்லரை தேவைகள். மிச்சமாகும் 50ரூ நாட்களில் சினிமா பக்கத்து அறை நபர்களின் டீவியில் வரும் சத்தம் மட்டும். சில நாட்களில் கமல். ரஜினி, அஜித், விஜய் குரல்கள் குழப்பும். நால்வரும் சேர்ந்து எதோ சினிமாவில் நடித்திருக்கிறார்கள் என்றே நினைப்பேன்.
உனக்கு எப்போ கல்யாணம்? எதேச்சையாக சந்திக்கும் பழைய தெரிந்த முகங்கள் துக்கம் விசாரிக்கும். பார்த்துகிட்டு இருக்காங்க என்பேன். வேறு எதும் சொல்லும் எண்ணமில்லை. நானிருக்கும் நிலைமையில் திருமணம் செய்து கொடுக்க சுற்றத்தில் யாருக்கும் விருப்பமும் இல்லை. ஏண்டா 30 தாண்டியாச்சே இன்னும் எத்தனை நாள் தனியாக இருப்ப, எதாச்சிம் பொண்ணை லவ் பண்ணியாச்சும் கல்யாணம் பண்ணிக்கலாமில்லே, கேட்பது என் மேலதிகாரி. அதில் கொஞ்சம் இழக்காரம் கலந்திருக்கும்.
ஆரம்ப நாட்களில் செந்தில் சொல்லி இருக்கிறான். சென்னையிலே கடல் காற்றும் காதலும்தான் சுலபமாக கிடைக்கும். வெள்ளந்தியாக எப்படி காதல் பண்றதுனு கேட்டுத்தொலைத்தேன். அன்று சனிக்கிழமை இரவு. முதல்ல நல்ல ட்ரெஸ் பண்ணனும். என் முக வாட்டத்தை பார்த்த குரு அதெல்லாம் அவசியமில்லை என்று ஆரம்பித்தான். டைம் இஸ் மணி. டைம் இஸ் கோல்ட் என்றான்.
பெண்களை கவர பணம் இல்லை தங்கம் வேண்டும். இல்லாட்டி அதே மதிப்புடைய காலம்தான் வேண்டும் என்று குரு கொஞ்சம் குழறியபடி சொன்னது, விவேகானந்தரிடம் ஞானபதேசம் பெற்ற சீடனை போல குதுகலிக்கை வைத்தது.
பேருந்தில் பார்த்த பெண்களில் அழகாய் தோன்றியவளைதான் காதல் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தேன். உபதேசம் நடந்த இரண்டு வாரமாகியும் என்னால் பேருந்தில் எந்த பெண்ணின் மேலும் காதல் வரவில்லை. அடுத்த சனி இரவு. செந்தில் சொன்னான். அழகான பெண்கள் ஏன் பேருந்துல போகப்போறாங்க என்றான். பாதி புரிந்தது. ஏன் பெண்களை இப்படி நினைக்கிறிங்க என்று கேட்டதுதான் தாமதம். யாரும் உபதேசம் செய்யாமலே எனக்கு புரிந்தது. சனி இரவு பிரம்மச்சாரிகளிடம் பெண்களை பற்றியோ, காதலை பற்றியோ பேசக்கூடாது என்பதை புரிந்து கொண்டேன். ஞாயிறு விடுமுறையாக போனது நல்லதாய் போயிற்று. தூங்கும் போது மணி நாலாகிவிட்டது. ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. ஒரு தோல்வி இருக்கிறது.
தோல்வி பயம் என்னை பேருந்தினுள் எந்த பெண்ணும் என் கண்ணுக்கு தெரியாமல் செய்துவிட்டது.
என்ன செய்ய கண்ணுக்கு தெரியாமலும் சில நுண்ணுயிரிகள் இருக்கத்தானே செய்கிறது.
(தொடரும்ம்)
1 comment:
//உடைந்து போன செல்போன், நேரத்தை கண்டுபிடி என்று கண்ணாமூச்சி ஆடியது.// I liked this very much..--Bala
Post a Comment